பதிவு செய்த நாள்
19
பிப்
2024
10:02
பாலக்காடு; பாலக்காடு அருகே கோட்டாயி பார்த்தசாரதி கோவிலில் செம்பை ஏகாதசி சங்கீத உற்சவம் கோலாகல துவங்கியது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு எல்லா ஆண்டும் மாசி மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். செம்பை குடும்பத்தினர் நடத்தும் இந்த விழா பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு உற்சவத்தின் கொடியேற்றம் கடந்த 16ம் தேதி நடந்தது. உற்சவத்தையொட்டி மூன்று நாள் நடக்கும் சங்கீத உற்சவம் நேற்று கோலாகலமாக துவங்கியது. மாலை 6.00 மணிக்கு பிரபல இசைக் கலைஞர் டி.வி. கோபாலகிருஷ்ணன் சங்கீத உற்சவத்தை செம்பை வைத்தியநாத பாகவதரின் உருவச் சிலைக்கு முன் வைத்த குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உற்சவ நிர்வாக குழு தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகன், வெங்கிட நாராயணன், காயத்திரி தம்பான், சைனுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது சங்கீத கச்சேரி நடந்தது. அவருக்கு விவேக் ராஜ (வயலின்), திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் (மிருதங்கம்), ஆலுவா ராஜேஷ் (கடம்), ஹரீஷ் ஆர் மேனன் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். அதன்பின் விஜய் ஜேசுதாசின் சங்கீத கச்சேரி நடைபெற்றது. இவருக்கு விவேக் ராஜ (வயலின்), ஹரி (மிருதங்கம்), திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் (கடம்), ஹரீஷ் ஆர் மேனன் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். இன்று மாலை சுகுமாரி நரேந்திர மேனனின் சங்கீத அச்சேரி நடக்கிறது. நாளை காலை 8.30க்கு உஞ்சவிருத்தி பஜனை, மண்ணூர் ராஜகுமாரன் உண்ணி தலைமையில் பஞ்சரத்ன தீர்த்தனை, இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடக்கிறது. மாலை 6.00க்கு சென்னை ராமநாதனின் சாக்ஸபோன், பாதிரியார் போள் பூவதிங்கள், பிரகாஷ் உள்ளியேரி குழுவின் ஹார்மோனியம் நடக்கும். பிப்., 21ல் ஏகாதசி உற்சவம் நிறைவடைகிறது.