காவிரிநதி ஏழு கட்டங்களாக பாய்ந்து வளம் பெருக்குகிறது. தலைக்காவிரி, அகன்றகாவிரி, பஞ்சநதம், கும்பகோணம், மத்தியார்ச்சுனம், மயிலாடுதுறை, காவிரிப்பூம்பட்டினம் ஆகியன அவை. இவற்றில் நடுநாயகமாகத் திகழும் தலம் கும்பகோணம். ஒரு சமயம், வெள்ளத்தால் உலகம் அழிய இருந்த வேளையில், மீண்டும் உயிர்களை படைப்பதற்கான பீஜம் தாங்கிய அமுத கும்பத்தை பிரம்மா நீரில் மிதக்க விட்டார். அது வெள்ளத்தில் மிதந்து ஒதுங்கிய இடமே கும்பகோணம். மாசிமகத்தன்று கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் பிரதான வழிபாட்டுத் தலமாகத் திகழ்கிறது. இங்குள்ள தீர்த்தம் மகாமகத் தீர்த்தம். காசியில் ஓடும் புனித கங்கையும் தன் பாவம் தீர நீராடும் குளம் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் பெருமை பெற்ற தலம்.