விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி புவனேஸ்வரர் உடனுறை புவனேஸ்வரி கோவிலில் நவராத்திரி நிறைவு விழா நடந்தது.விக்கிரவாண்டி புவனேஸ்வரர் கோவிலில் கடந்த 16ம் தேதி முதல் நவராத்திரி விழா துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பஜனைகள் நடந்தது.கடந்த 24ம் தேதி மாலை 5 மணியளவில் நவராத்திரி நிறைவு நாள் நிகழ்ச்சியில் விஜயதசமி விழா நடந்தது. இதனை முன்னிட்டு ரவி குருக்கள் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தார்.பின்னர் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வலம் வந்த பின், ஊஞ்சல் உற்சவம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பஜனை பாடல்களை பாடினர். இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சுப்புராயலு, முன்னாள் சேர்மன் குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.