பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது சிவனிடம், உங்களை வழிபடுவதற்கு உகந்த நாள் எது?” என்று பார்வதி கேட்டாள். ‘‘மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு பிரியமானது. அந்த நாளே மகாசிவராத்திரி. அன்று விரதமிருப்பது சிறப்பு. அன்றிரவு நான்கு ஜாமங்களில் சிவபூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வ இலைகளால் செய்யும் அர்ச்சனையே சிறந்தது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இதன் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது” என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த பார்வதி தன் தோழியரான அநிந்திதை, கமலினியிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக் கூற எல்லா கோயில்களிலும் சிவராத்திரி பூஜை நடக்கத் தொடங்கியது.