திருப்புவனத்தில் களையிழந்த ஆறாம் நாள் திருவிழா; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2024 04:03
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழாவின் ஒரு கட்டமாக நடைபெறும் ஆறாம் திருவிழா சமீப காலமாக பல்வேறு காரணங்களால் சம்பிரதாயத்திற்காக மட்டுமே நடத்தப்பட்டு வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது. புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனி திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தார்கள், மண்டகப்படிதாரர்கள் என பிரிக்கப்பட்டு பத்து நாட்களும் எல்லா மண்டகப்படிதாரர்கள் சார்பிலும் வெகு விமரிசையாக நடைபெறும், மடப்புரத்தில் ஆறாம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். ஆறாம் திருவிழாவான புதன்கிழமை காலை பத்து மணிக்கே அம்மனும் சுவாமியும் மடப்புரம் மண்டகப்படியில் அலங்கார கோலத்தில் எழுந்தருளுவார்கள், அபிஷேகம், காலை நிகழ்ச்சிகள் என வைகை ஆற்றினுள் விடிய விடிய களை கட்டும். திருப்புவனம், கோட்டை, புதூர், பழையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வைகை ஆற்றினுள் நடந்து மடப்புரம் சென்று சுவாமியை வழிபட்டு கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம், ஆனால் கடந்த சில வருடங்களாக போதிய பாதுகாப்பு இல்லாதது, போதையில் பக்தர்ளை வழிமறிப்பது, சுத்தம் இல்லாமல் அடர்ந்த புதர்கள் அடங்கிய கருவேல மர காடாக மாறியது உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் ஆறாம் திருவிழாவில் பங்கேற்க மடப்புரம் செல்வது குறைந்து தற்போது ஒருசில பக்தர்கள் மட்டும் சாலைவழியாக சென்று விடுவதால் களையிழந்து விட்டது. விடிய விடிய வைகை ஆற்றினுள் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதும் இல்லை. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் சம்பிரதாயத்திற்காக மட்டுமே ஆறாம் திருவிழா நடத்தப்படும் சூழல் உருவாகி விடும் என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.