புதுடில்லி ; இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்திய இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண பொடிகளை தூவி மகிழ்கின்றனர். கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க இந்த வசந்த காலத்தின் முக்கியப் பண்டிகையான ஹோலி, வரும் 25ல் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு புதுடில்லி அருகே மதுரா துவாரகாதீஸ்வரர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது; ஏராளமானோர் பங்கேற்றனர்.