பூட்டி சீல் வைக்கப்பட்ட மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் திறப்பு; பலத்த பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2024 12:03
விழுப்புரம்: மேல்பாதி கிராமத்தில் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் உயர் நீதிமன்ற உத்தரவின் படி இன்று திறக்கப்பட்டது.
விழுப்புரம், மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமையான திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்று வழிபட மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இது தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எடுக்கப்படாததால் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. கோயிலை மீண்டும் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி, ஒருதரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம், திரௌபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகாலப் பூஜையையும் மட்டும் நடத்த, மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதன்படி கோவில் இதைத் தொடர்ந்து விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் முன்னிலையில் இன்று காலை வருவாய் ஆய்வாளர் கோயில் சீலை அகற்றினார். தொடர்ந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட பூசாரி கோயிலுக்குள் சென்று திரெளபதி அம்மனுக்கு பூஜைகள் செய்தார். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.