பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. நவம்பர் 9ம் தேதி திருக்கல்யாண விழா நடக்கிறது. விழாவை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோயில் (சிவன் கோயில்) ஒன்றாகும். இந்த கோயிலில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாக்களும் மிகப் பெரிய அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை ஒட்டி சுவாமி, அம்மனுக்கு விசேஷ பூஜைகள் அலங்காரங்கள் நடக்கிறது. கொடிக்கம்பத்திற்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடக்கிறது. அதனை தொடர்ந்து பாகம்பிரியாள் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு பித்தளை சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடக்கிறது.இதே போல் ஒவ்வொரு நாளும் பாகம்பிரியாளுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், பல்வேறு வாகனங்களில் இரவில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட சம்பரத்தில் வீதி உலா வருதல் நடக்கிறது. இரண்டாம் நாள் கிளி வாகனத்திலும், மூன்றாம் நாள் அன்னலட்சுமி வாகனத்திலும், நான்காம் நாள் சிம்ம வாகனத்திலும், ஐந்தாம் நாள் வெள்ளிமயில் வாகனத்திலும், ஆறாம் நாள் வெள்ளி விருஷய வாகனத்திலும், ஏழாம் நாள் கமல வாகனத்திலும், எட்டாம்நாள் காமதேனு வாகனத்திலும் அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது.
ஒன்பதாம் திருநாளான நவம்பர் 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. காலையில் பாகம்பிரியாள் அம்மனுக்கு அபிஷேகம், தீபாரதனை நடத்தப்பட்டு தேருக்கு அம்மன் அழைத்து வருதல் நடக்கிறது. பின்னர் பல்வேறு பூஜைகளுக்கு பின்னர் காலை பத்தரை மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு திருத்தேர் தடம்பார்த்தல் மற்றும் கேடயத்தில் திருவீதி உலா நடக்கிறது.பத்தாம் திருநாளில் பூம்பல்லக்கில் பாகம்பிரியாளர் ரதவீத உலா வருதல் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நாளாக கருதப்படும் 11ம் திருநாளான நவம்பர் 9ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாணவிழா நடக்கிறது. இரவு ஏழு மணிக்கு திருக்கல்யாணம் முடிந்த பிறகு இரவு ஒன்பதரை மணிக்கு சுவாமி, அம்மன் பட்டிணப்பிரவேசம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.நிறைவு நாளான 10ம் தேதி பாகம்பிரியாள், சங்கரராமேஸ்வரருக்கு குடமுழுக்கு தீபாராதனை, ஊஞ்சல் தீபாராதனை, சண்டிகேஸ்வரர், பைரவர் வழிபாடு, யாகசாலை பூஜையுடன் ஐப்பசி திருவிழா நிறைவு பெறுகிறது.விழாவை ஒட்டி பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசன்காத்தபெருமாள், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.