தென் திருபுவனம் சிவன் கோயில் கல்வெட்டுக்களில் அரிய தகவல்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30அக் 2012 11:10
பேட்டை:தென் திருபுவனம் புஷ்பவனநாதர் கோயில் கல்வெட்டுக்களில் அரிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது தொல்லியல் ஆய்வில் தெரியவந்தது. முக்கூடல் அருகே தென் திருபுவனம் புஷ்பவனநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை மதுரை தொல்லியல் துறை அலுவலர் வேதாசலம் ஆய்வு செய்தார். கல்வெட்டில் அரிய தகவல்கள் இடம் பெற்றிருப்பது ஆய்வில் தெரியவந்தது.முள்ளிநாடு என்ற பண்டைய நாட்டுப்பிரிவில் இருந்த ஊர் தென் திருப்புவனம். இந்த ஊருக்கு சுந்தரபாண்டியநல்லூர் என்ற பெயரும் இருந்தது. கி.பி.12ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சடையவர்மன் ஸ்ரீவல்லபன் காலத்தில் (கி.பி.1101ல்) கற்கோவிலாக இக்கோவில் உருவானது. இடைக்கால பாண்டியர் கால கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இக்கோவில் உள்ளது.இங்கு பாண்டிய மன்னர், உதயமார்த்தண்ட மன்னர் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. இங்குள்ள இறைவன் தெள்நீர் வண்ணமுடைய மகாதேவர், அன்னை திருப்பூவின்தேவி நாச்சியார் என முற்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளனர். பழங்காலத்தில் இந்த ஊர் தென் திருப்பூவனம் என குறிப்பிடப்பட்டது. பாண்டிய நாட்டு வடபகுதியில் உள்ள திருப்பூவனத்திற்கு இணையாக தென்பாண்டி நாட்டில் உள்ள இத்தலம் தென் திருப்பூவனம் என அழைக்கப்பட்டுள்ளது என கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது என தொல்லியல் துறை அலுவலர் வேதாசலம் தெரிவித்தார்.இதுதொடர்பான தகவல் விபரக்குறிப்புக்களை வேதாசலம் அப்பகுதி மக்களிடம் அளித்தார். ஏற்பாடுகளை சுற்றுலாக்குழு பாரதி, தானம் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.