பதிவு செய்த நாள்
26
மார்
2024
05:03
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உருமாண்டம் பாளையத்தில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் கற்பூர குண்டம் சிறப்பு பூஜை நடந்தது.
விழாவையொட்டி கடந்த, 11ம் தேதி, முதல், 17ம் தேதி வரை பண்ணாரி மாரியம்மனுக்கு ஒரு கால பூஜையும், 18ம் தேதி முதல், 24ம் தேதி வரை இரண்டு கால பூஜைகள் நடந்தன. 25ம் தேதி பூக்கரும்பு வெட்டுதல், 3 கால பூஜையும், அன்று மாலை சோளம், கற்பூரம், பூமாலை வைத்து சாமி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதையடுத்து குண்டத்தில் பூ கரும்பு வைத்து, பக்தர்கள் கொண்டு வந்த கற்பூரங்களை குண்டத்தில் ஏற்றி, மத்தளம், கொம்பு, உடுக்கை வைத்து பாட்டு பாடி அம்மனை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று 26ம் தேதி காலை, 5:30 மணிக்கு பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை குண்டத்தில் அடுக்கி, அம்மனிடம் உத்தரவு பெற்று, கத்திகளை வைத்து, பூக்களை உருட்டும் பூக்குண்டம் திருவிழா நடந்தது. பின்னர் மாப்பிள்ளை விநாயகர், வில்வமரம், அம்மன் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பக்தர்கள், உற்சவரை கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பொறுப்பாளர்கள் அருணாசலம், தேவேந்திரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.