பதிவு செய்த நாள்
26
மார்
2024
05:03
மேட்டுப்பாளையம்; மைதானம் மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், கிழங்கு மண்டிகள் நிறைந்த, மைதானத்தில், மிகவும் பழமை வாய்ந்த, மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், 93ம் ஆண்டு குண்டம் மற்றும் தேர் திருவிழா, கடந்த, 12ம் தேதி பூச்சாட்டன் துவங்கியது. 19ம் தேதி கம்பம் நடப்பட்டது. 21ல் கொடியேற்றமும், 22ல் திருவிளக்கு பூஜையும் நடந்தது. நேற்று காலை பவானி ஆற்றில், பவானி அம்மன் கோவிலில் இருந்து, அம்மன் சுவாமியை கோவிலுக்கு அழைத்து வந்தனர். தலைமை பூசாரி மோகன்குமார் குண்டத்தை சுற்றி வலம் வந்து, பூஜை செய்து, முதலில் குண்டத்தில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து உதவி பூசாரிகள், அலகு குத்திய ஆண், பெண்கள் மற்றும் ஏராளமான ஆண்கள், பெண்கள் குண்டத்தில் இறங்கி, தீமிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். குண்டம் இறங்கி வந்த பக்தர்களுக்கு, அன்னதானம், நீர்மோர், கம்மங்கூழ் ஆகியவற்றை பல்வேறு தரப்பினர் வழங்கினர். அதைத் தொடர்ந்து, 28ம் தேதி இரவு அம்மன் திருவீதி உலாவும், 29ல் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மாலையில் மஞ்சள் நீராட்டும், மகா அபிஷேகமும், ஏப்ரல் 1ம் தேதி மறு பூஜை மற்றும் அன்னதானம் ஆகியவை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் விழா கமிட்டினர் செய்து வருகின்றனர்.