தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மார் 2024 02:03
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நாளை இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்குகிறது.
இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி மாதம் பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தீச்சட்டி,கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டுச் செல்வதை வழக்கமாகக்கொண்டுள்ளனர். இந்தாண்டிற்க்கான திருவிழா நாளை 28ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வருகிற ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளது.மறுநாள்5ம் தேதி இரவு ஏழு முப்பது மணிக்கு மின் அலங்கார தேர்பவனி நடைபெற உள்ளது.இந்நிலையில் பங்குனி மாதம் பிறந்தது முதல் ஏராளமான பக்தர்கள் தயமங்கலத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். விழாவையொட்டி பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.