பதிவு செய்த நாள்
27
மார்
2024
04:03
மேட்டுப்பாளையம்; குண்டத்து காளியாதேவி கோவிலில் நடந்த, குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேட்டுப்பாளையம் அடுத்த ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலில் இம்மாதம், 12ம் தேதி பூச்சாட்டுடன், குண்டம் விழா துவங்கியது. 25ம் தேதி அம்மன் அழைப்பும், 26ம் தேதி இரவு குண்டம் திறந்து பூ வளர்க்கப்பட்டது. இன்று காலை, 5:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, கோவிலுக்கு அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். 6:30 மணிக்கு தலைமை பூசாரி பழனிசாமி, குண்டத்தை சுற்றி பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து அருள்வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் உதவி பூசாரிகள் குண்டம் இறங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என, ஏராளமானவர்கள் குண்டம் இறங்கி, தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். ஏப்ரல் 1ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.