திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையார் உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2024 03:03
திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தின் போது 10 நாட்கள் விழா நடப்பது வழக்கம். இவ்விழா முடிவு பெற்ற மறுநாள் காரைக்கால் அம்மையார் உற்சவ விழா இரண்டு நாட்கள் நடைபெறும். அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விழா துவங்கியது. அப்போது காரைக்கால் அம்மையார் புஷ்பநாக ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் பூஜைகள் நடந்தது. இதையடுத்து விழாவின் இரண்டாம் நாளான நேற்று காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதை விளக்கும் விதமாக, அவர் திருவாலங்காடை சுற்றியுள்ள கிராமங்களை வலம் வரும் வீதியுலா நடந்தது. அப்போது, அம்மையாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.