பதிவு செய்த நாள்
31
அக்
2012
10:10
சபரிமலை: சபரிமலையில், பழைய கட்டடங்களை இடித்து விட்டு, 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது; இங்கிருந்தே பக்தர்கள், மகரஜோதி தரிசனம் செய்ய இயலும். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, மண்டல மற்றும் மகரஜோதி உற்சவ காலங்களில், பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் பக்தர்கள் மற்றும் சன்னிதானத்தில் இருந்து, மகரஜோதி தரிசனம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால், பக்தர்களுக்கு போதுமான வசதி அளிக்க, திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. இதையடுத்து, சன்னிதானத்தில் இருந்து, பாண்டித்தாவளம் செல்லும் பாதையில் இருந்த, பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, அங்கு, புதிய ஓய்வு விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய விடுதி, 12 ஆயிரம் சதுரடியில், மூன்று தளங்களை கொண்டது. இங்கு, ஒரே நேரத்தில், 10 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து ஓய்வெடுக்க முடியும்.பக்தர்கள் வசதியாக சாய்ந்து ஓய்வெடுக்க தேவையான, காங்கிரீட் பெஞ்ச்கள் அமைக்கப்பட உள்ளன. ஆனால், இங்கு சமையல் செய்யவோ, அசுத்தப்படுத்தவோ அனுமதிக்கப்படாது என, நிர்வாகி ஒருவர் கூறினார். இந்த விடுதியில் இருந்தே, மகரஜோதி தரிசனம் செய்ய முடியும் என்பது சிறப்பம்சம்.