பதிவு செய்த நாள்
31
அக்
2012
11:10
கும்பகோணம்: புளியம்பேட்டை அரவிந்த் நகரில் புதிதாக சரஸ்வதி அம்மனுக்கு கோவில் கட்டும் திருப்பணியில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பன்னெடுங்காலமாக கணபதி ஆலயங்கள், முருகன், சிவன், அம்பாள், விஷ்ணு கோவில்கள் வழிபாட்டில் இருந்து வருகிறது. அம்மனுக்கு ஆலயங்கள் பல இருந்தாலும், மகா சரஸ்வதிக்கு மட்டும் கோவில் மிக,மிக குறைவு. திருவாரூர் மாவட்டத்தில் கூத்தனூர் சரஸ்வதி கோவில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிலையில் கும்பகோணம் அருகே புளியம்பேட்டை அரவிந்த் நகரில் புதிதாக மகா சரஸ்வதி அம்மனுக்கு தனி கோவில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.கிழக்கு நோக்கிய நிலையில் கர்ப்ப கிரகம், ஏகதள விமானம், முக மண்டபம், சுதை வடிவில் முப்பெருந் தேவியர், மூலஸ்தானத்தில், மூன்றரை அடி உயரத்தில் மகா சரஸ்வதி சதுர்புஜங்களுடன் வீணை வாசிக்கும் நிலையில் அமைக்கப்படுகிறது.மேலும் முன் மண்டபத்தில் மகா துர்க்கை, மகாலெட்சுமி சன்னதிகளும் அமையவுள்ளது. இக்கோவில் திருப்பணியில் பங்கேற்கும்படி, பக்தர்களுக்கு திருப்பணி குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.