பதிவு செய்த நாள்
31
அக்
2012
11:10
கும்பகோணம்: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள், நான்காவது படைவீடாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புடையதும், ஓம் எனும் பிரணவமந்திரத்தை, தந்தையாகிய சிவபெருமானுக்கு முருகன் உபதேசம் செய்த தலமாக விளங்குவது சுவாமிமலை சுவாமிநாத ஸ்வாமி கோவில். இந்த கோவிலில் கடந்த, 2,000ல் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.ஆகம முறைப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென்பதால், கோவில் விமான பாலாலயம் செய்யப்படுகிறது.இதையொட்டி கடந்த, 28ம் தேதி காலை, 7.30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை போன்ற பூர்வாங்க வழிபாடுகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து நேற்று முன்தினம், காலை, 5 மணி முதல், 2ம் கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் காலை, 6.30 மணிக்கு விமான திருப்பணி பிரதிஷ்டையும், பாலாலயமும் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறையின், மயிலாடுதுறை சரக இணை கமிஷனர் சுவாமிநாதன், சுவாமிமலை கோவில் துணை கமிஷனர் கஜேந்திரன், கும்பகோணம் சரக உதவி கமிஷனர் மாரியப்பன், சுவாமிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணஸ்தபதி உள்பட பலர் பங்கேற்றனர். கோவில் விமானத் திருப்பணி, ஒரு கோடி ரூபாயிலும், பிரகாரத் திருப்பணி, ஒரு கோடி ரூபாயிலும் நடக்கிறது. கோவிலில் விமானத் திருப்பணி துவங்கியுள்ளதால், தங்கரத புறப்பாடு, ஸ்வாமி புறப்பாடு மற்றும் திருவிழாக்கள், கும்பாபிஷேகத்துக்கு பின்தான் நடக்கும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.