பதிவு செய்த நாள்
01
நவ
2012
01:11
முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்!
தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் திருவருள் பாலிக்கும் தணிகை திருத்தலத்தில், சைவ வேளாளர் குடியில் தோன்றியவர் கச்சியப்பர். இவரது முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்கள். அதனால் இவருக்குக் கச்சியப்பர் என்ற திருப்பெயர் அமைந்தது. சிறு வயதில் சிறந்த ஒழுக்கம், அன்பு, அருள் ஆகிய நற்குணங்களோடு வளர்ந்து வந்தார். இளமையில் தகுந்த ஆசிரியரிடம் கல்வி பயின்று, பின்பு சிவத்தல யாத்திரை தொடங்கி, தொண்டை நாட்டிலுள்ள புனிதத் தலங்களைத் தரிசித்தார். பிறகு, ஆனந்த நடராஜர் அற்புதக் கூத்தாடும் தில்லையை வணங்கி, காவிரிக்கரையில் உள்ள திருவாவடுதுறையை அடைந்தார்.
அப்போது, அங்கே சின்னப் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஞானாசார்யராகிய அம்பலவாண தேசிகரைத் தரிசித்தார். அவர் கச்சியபருக்கு சமய தீட்சை அளித்தார். அவரிடம் துறவற தீட்சையும் பெற்றுத் துறவு நிலை மேற்கொண்டார் கச்சியப்பர். அக்காலத்தில் சைவ சித்தாந்த போத திராவிட மகா பாஷ்யகர்த்தராய் எழுந்தருளியிருந்த மாதவ சிவஞான யோகிகள் அவர்களை வித்யா குருவாகக் கொண்டு, தமிழ்மொழியில் பல இலக்கணங்கள், இலக்கியங்கள், தர்க்க சாஸ்திரம், மெய்கண்ட சாத்திரம், பண்டார சாத்திரம் மற்றும் பல நூல்களையும் நன்கு ஓதி உணர்ந்தார். மகா வித்வான் எனப் பெயர்பெற்று, தமது குருநாதரின் மாணாக்கர்களில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தார். கச்சியப்பரின் வாக்கு வன்மையையும், கடல் மடை திறந்ததுபோல் சொற்பொழிவு ஆற்றும் அருமையையும் அனைவரும் புகழ்வர். செய்யுட்களை மிக விரைவில் இயற்றும் வல்லமை கொண்டவர் இவர். காலம், இடம் என்பதற்கேற்ப புதுப்புது யுக்திகளுடன் இவரது கவித்துவம் பிரகாசிக்கும் என்பதால், இவரது கவிபாடும் ஆற்றலைப் புகழ்ந்து கவிஞர் பெருமான், கவிச்சக்ரவர்த்தி, கவிராக்ஷஸ கச்சியப்ப முனிவர் என்றெல்லாம் அழைத்தனர்.
கச்சியப்பர் தமது தல யாத்திரையில் பஞ்சபூதத் தலங்களில் நீர் (அப்பு) தலமான திருவானைக்காவை தரிசித்து, புராணத்தையும் பாடி அரங்கேற்றினார். பிறகு, கொங்கு நாட்டில் மேலைச் சிதம்பரம் என்று போற்றப்படும் திருப்பேரூர் சென்று, அங்குள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றைச் சிறப்பித்து, சொற்சுவை, பொருட்சுவையோடு பேரூர் புராணத்தைப் பாடியருளினார். அப்போது, அந்தப் பகுதியில் மழையின்மையால் வெப்பம் மிகுதியாகி, மக்கள் தண்ணீருக்காகத் தவித்தனர். அதைக் கண்டு மிகவும் வேதனையடைந்தார் கச்சியப்பர். பேரூர் நடராஜப் பெருமான்மீது அருமையான பதிகம் ஒன்று பாட, மழை பொழிந்தது. மக்கள் மிகவும் ஆனந்தமடைந்து, கச்சியப்ப முனிவரைத் தொழுது போற்றினர். பின்பு, கந்தவேள் கருணையை நினைந்து பதிகம் பாடி, அங்கிருந்த அனைவரின் உடல் நோயையும் நீக்கியருளினார் கச்சியப்பர். தொடர்ந்து, தாம் பிறந்த மண்ணாகிய தணிகையை அடைந்து, அங்கு இயற்றமிழ் போதகாசிரியராக விளங்கிய கந்தப்ப அய்யர் மற்றும் அவரது குமாரர்கள் விசாகப் பெருமாள், சரவணப் பெருமாள் ஆகியோருக்குத் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்தருளினார். தண் தமிழ் வள்ளல் திருத்தணிகேசன் இவரது கனவில் தோன்றி தணிகைப் புராணம் பாடும்படி அருள்பாலித்தான்.
கந்தவேளின் விண்ணப்பத்துக்கு செவிசாய்த்தவர், சொல்வளம், செய்யுள் நடை, சந்த அழகு, பொருட்சுவை என அனைத்தும் நிறைந்து, தமிழ்மொழியில் எந்த இலக்கியமும் இதற்கு இணையில்லை என்னும் வகையில் அனைவரும் போற்றும்படியாகவும் அமைந்துள்ள திருத்தணிகைப் புராணத்தை இயற்றினார். திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கச்சியப்ப முனிவரைத் தமிழ்வித்யா குருவாகவும், வழிபடு தெய்வமாகவும் எண்ணிப் போற்றி வந்தாராம். பிள்ளையவர்கள் நூல் இயற்றும்போதும், பாடம் சொல்லுகையில் பொருள் கூறும்போதும் முட்டுப்பாடு (பொருள் விளங்காமல் தடுமாற்றம் நேர்ந்தால்) கச்சியப்ப முனிவரைத் தியானிப்பது வழக்கம். உடனே, அந்தத் தடுமாற்றம் நீங்கும் எனப் பிள்ளையவர்களின் மாணவரான டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் குறிப்பிட்டுள்ளார். கச்சியப்பரின் மாணவர்களில் சிறந்த கந்தப்ப அய்யருக்கு ஒருமுறை வயிற்றில் குன்ம நோய் (வயிற்று வலி) உண்டானபோது, மிகவும் வருந்தினார். கச்சியப்ப முனிவர் தணிகைக்குமரன் அருள்கொண்டு, தணிகை ஆற்றுப்படை என்னும் அற்புதமான பிரபந்தத்தைப் பாடியருளினார். அதில் குஷ்டம், பெருநோய், முட்டியவாதம், தொழுநோய், முயலகன் என்னும் வலிப்பு நோய், மற்றும் விஷப் பூச்சிகளால் ஏற்படும் துன்பம், கோள்களால் வருந்துதல், பேய் பித்து பிடித்தல், உடற்குறைகள் போன்ற அனைத்து உபாதைகளும் தணிகை முருகன் திருவருளால் நீங்கும் என்று வழிகாட்டுகிறார். இந்தப் பிரபந்தத்தை முறையாகப் பாராயணம் செய்து, தமது குன்ம நோய் நீங்கப்பெற்றார் கந்தப்ப அய்யர் என்று வரலாறு கூறுகிறது.
கச்சியப்ப முனிவர் சென்னையில் வசித்த காலத்தில் அங்குள்ள பக்தர்களும், தனவந்தர்களும் கேட்டுக்கொண்டபடி விநாயகப் புராணம், சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் முதலான நூல்களைப் பாடி அரங்கேற்றினார். அதனால் மகிழ்ந்த மக்கள் அதற்கு 2000 வராகன் (பவுன்) அன்பளிப்பாகக் கொடுத்தனர். அதைக்கொண்டு திருவாவடுதுறை ஆதின பரமாசார்யராகிய நவசிவாய மூர்த்திகள் சன்னதி மண்டபத் திருப்பணியை சிறப்புறச் செய்து முடித்தார். அதன்பிறகு காஞ்சிபுரம் சென்று, அங்கே காஞ்சிபுராணத்தின் இரண்டாம் காண்டத்தை மொழிபெயர்ப்பு செய்ததுடன், கச்சி ஆனந்தருத்ரேசர் பதிற்றுப் பத்தந்தாதி, கழிநெடில், வண்டு விடு தூது மற்றும் பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி ஆகியவற்றைப் பாடியருளினார். கச்சியப்ப முனிவர் நூல்கள் பல இயற்றியதுடன் பல நன்மாணவர்களுக்குக் கற்பித்து, தமிழ் இலக்கிய இலக்கண அறிவையும் வளர்த்தார். தமிழுக்கு அருந்தொண்டுகள் பல ஆற்றிய கச்சியப்ப முனிவர், 1790-ஆம் ஆண்டில் சித்திரை மாதத்தில் திருமுருகன் திருவடிகளை அடைந்தார்.