பள்ளிப்பட்டு:திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த வெளிகரம் கிராமத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது பழமையான திருமல்லீஸ்வரர் கோவில். பாழடைந்து கிடந்த இந்த கோவில், ஆறு மாதங்களுக்கு முன் சிவனடியார்களால் புனரமைக்கப்பட்டது. இந்த கோவிலில், மூலவருக்கு எதிரில் நந்தியம் பெருமான் சிலை அமைந்துள்ளது. நந்தியம் பெருமானுக்கு புதிய மண்டபம் கட்டுவதற்காக, நேற்று முன்தினம் பள்ளம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த இடத்தில் கோவிலின் சிதிலம் அடைந்த பாறைகள் கிடந்தன. பாறைகளை இயந்திரத்தின் வாயிலாக நகர்த்திய போது, அங்கு அம்மன் சிற்பம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த சிலையை பக்தர்கள், கோவிலில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இந்த கோவிலின் தொன்மை குறித்து கிராமத்தினருக்கு ஏதும் தெரியவில்லை. கோவில் வளாகத்தில் உள்ள கல்வெட்டு குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, வெளிப்படுத்தினால் மட்டுமே, இந்த தலத்தின் வரலாறு தெரியவரும். பாழடைந்து கிடந்த சிலவாலயம், சிவனடியார்களால் வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அம்மன் சிலை கண்டறியப்பட்டுள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.