பதிவு செய்த நாள்
26
ஏப்
2024
05:04
திருநகர்; விளாச்சேரியில் ராமர் சிலையை வாங்க அதிக மக்கள் விரும்பி ஆர்டர் செய்கின்றனர். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சீசனுக்கு தகுந்தாற்போல் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரீஸ், காகித கூழ் ஆகியவற்றால் சுவாமி சிலைகள், கிறிஸ்மஸ் குடில்கள், அலங்கார பொருட்கள் தயாரிக்கின்றனர். தப்போது கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியை துவக்கி உள்ளனர். அங்கு கொலு பொம்மைகள் வாங்க வரும் மக்கள் ராமர் சிலைகளை அதிகளவில் கேட்கின்றனர்.
ராமலிங்கம் கூறுகையில், அனைத்து வகை கொலு பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றோம். இந்த ஆண்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பின்பு ஏராளமான மக்கள் ராமர் சிலைகளை அதிக அளவில் விரும்பி கேட்டு ஆர்டர் செய்கின்றனர். கடந்த ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட ராமர் சிலைகளுடன் இந்த ஆண்டு சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருடன் ராமர், ராமர் பட்டாபிஷேகம், சஞ்சீவி மலை, குகன் ஓடம், சீதா திருக்கல்யாணம், அகலிகை சாப விமோசனம், அசோக வனம், அனுமன் சேனை, ராமர் பாலம் (சேது பந்தனம்) ஆகிய சிலைகள் தயாரிக்க உள்ளோம் என்றார்.