பதிவு செய்த நாள்
05
நவ
2012
10:11
அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயில் கந்த சஷ்டி விழா, நவ., 13ல், காலை 8.15 மணிக்கு துவங்குகிறது. அன்று மாலை அன்ன வாகனத்தில் சுவாமி உலா நடக்கிறது. நவ., 14 முதல் 18 வரை தினமும் காலை 9 மணிக்கு லட்சார்ச்சனையும், அபிஷேகமும் நடக்கிறது. மாலையில் பல்வேறு வாகனங்களில் முருகப் பெருமான் வலம் வருகிறார்.சூரசம்ஹாரம் நவ.,18ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 3 மணிக்கு அன்னை பராசக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 3.15 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்படும் முருகப் பெருமான், ஈசான திக்கில் கஜமுகனையும், அக்னி திக்கில் சிங்கமகா சூரனையும் வதம் செய்கிறார். பின் நாவல் மரத்தடியில் பத்மாசூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிகழ்த்துகிறார். மாலை 5 மணிக்கு முருகப் பெருமானுக்கு சாந்த அபிஷேகம் நடக்கிறது.நவ.,19ல், காலை 7 மணிக்கு அபிஷேகமும், 10.20 மணிக்கு திருக்கல்யாணமும், 11.15 மணிக்கு நித்திய உற்சவருக்கு அபிஷேகம், பாவாடை தரிசனமும் நடக்கிறது. அன்று மாலை பல்லக்கில் புறப்படும் முருகப் பெருமான் கோயிலை வலம் வந்து அருள் பாலிக்கிறார். மறுநாள், மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெருகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்கின்றனர்.