பதிவு செய்த நாள்
05
நவ
2012
10:11
நகரி: திருப்பதி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு, யானை ஒன்று காணிக்கையாக வழங்கப்பட்டது. சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலை கழக துணைவேந்தர், சத்தியநாராயணா, திருப்பதி, திருச்சானூர், பத்மாவதி தாயார் கோவிலின் உற்சவ சேவைக்காக, யானை ஒன்றை காணிக்கையாக வழங்குவதாக பிரார்த்தனை செய்து கொண்டார்.அதற்காக, ஒடிசா மாநிலத்தில், ஆறு வயதுள்ள யானை ஒன்றுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, கடந்த வெள்ளியன்று திருச்சானூர் கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.
கோவிலில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியத்திடம், எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் சார்பில், யானை ஒப்படைக்கப்பட்டது. "ஸ்ரீநிதி என, பெயரிடப்பட்டுள்ள அந்த யானை, கோவிலை சுற்றி வலம் வந்த பின், கோவில் அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர்.கோவிலின் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம் கூறுகையில், ""வரும், 10ம் தேதி, திருச்சானூர் கோவிலில், கார்த்திகை பிரமோற்சவம் துவங்குகிறது. பத்மாவதி தாயார் உற்சவ சேவைக்கு, யானை பயன்படுத்தப்படும். திருமலை கோவிலில், மாத பவுர்ணமி நாட்களில் நடத்தப்படும், மலையப்ப சுவாமியின் கருட வாகன சேவையின் போது, மாடவீதி உற்சவ சேவைக்கும் யானை பயன்படுத்தப்படும். தேவஸ்தானத்திற்கு சொந்தமாக, தற்போது, எட்டு யானைகள் உள்ளன, என்றார்.