பதிவு செய்த நாள்
13
மே
2024
01:05
திருச்செந்துார்; கோடை விடுமுறை மற்றும் ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
வாகன நெரிசலில், திருச்செந்துார் நகரமே ஸ்தம்பித்தது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகவும். யாத்ரீகர்கள் ஸ்தலமாகவும் உள்ளது. திருவிழாவை தவிர்த்து, விஷேச தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஞாயிறு விடுமுறை தினமான நேற்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். கோயில் நடை நேற்றுஅதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தன. தமிழகத்தின், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி பொது தரிசனத்தில் சுமார் 5 மணி நேரமும், ரூ.100 கட்டண தரிசனத்தில் நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், நுாற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால், திருச்செந்துார் நகர் பகுதி முழுவதும், கடுமையான போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.