திருமங்கலத்தில் ஒரே பந்தியில் 18 ஆயிரம் பேருக்கு கறி விருந்து; ஆண்கள் மட்டும் பங்கேற்கும் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2024 04:05
திருமங்கலம்; மதுரை மாவட்டம் திருமங்கலம் சொரிக்காம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் பட்டி கரும்பாறை முத்தையா சுவாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கறி விருந்து திருவிழாவில் ஒரே பந்தியில் 18 ஆயிரம் பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.
திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சொரிக்காம்பட்டி ஊராட்சி பெருமாள் பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தை மற்றும் வைகாசி மாதங்களில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்து பரிமாறப்படுவது வழக்கம். கடந்த சில வருடங்களாக வைகாசி மாதத்தில் மட்டுமே இந்த கறிவிருந்து திருவிழா நடத்தப்படுகிறது. வீடு கட்டுதல், அரசு வேலை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து நேர்த்திக்கடன் வைக்கும் கிராம மக்கள் நேர்த்திக்கடன் நிறைவேறியவுடன் கருப்பு நிற ஆடுகளை கரும்பாரை முத்தையா சுவாமிக்கு நேர்ந்து விடுவர். இவ்வாறு விடப்படும் ஆடுகளின் காதுகளில் துளையிடப்பட்டு சாமி ஆடுகள் என அடையாளம் காணப்படும். இந்த ஆடுகள் கிராமப் பகுதிகளில் யார் தோட்டத்தில் மேய்ந்தாலும் யாரும் விரட்டுவது கிடையாது. மேலும் விளைச்சல் அதிகரிக்கும் நிலையில் விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடை செய்யும் முதல் நெல்லை கோவிலுக்கு நேர்த்திக்கடனாக செலுத்துவர். வருடம் முழுவதும் இவ்வாறு செலுத்தப்படும் நெல் அரைக்கப்பட்டு விருந்து தயார் செய்யப்படும். இந்த வருடம் 110 ஆடுகள் வரை நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டன. இன்று நடந்த திருவிழாவில் இந்த ஆடுகள் பலியிடப்பட்டு கறி விருந்தும் விடிய விடிய தயார் செய்யப்பட்டது.
கடந்த சில வருடங்களாக இந்த கோவில் திருவிழா பிரபலம் அடைந்து வரும் நிலையில் கரடிக்கல், சொரிக்காம்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் மட்டுமல்லாது, திருமங்கலம், மதுரை, தேனி, உசிலம்பட்டி, வாடிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கோவிலில் ஒன்று கூடினர். கோவிலில் ஐதீகத்தின்படி ஒரே ஒரு முறை மட்டுமே அந்த இடத்தில் பந்தி போட்டு விருந்து பரிமாறப்படும் என்பதால் 18,000 பேருக்கு மேல் ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டனர். இடம் இல்லாததால் வயல்வெளிகளிலும் மக்கள் அமர்ந்திருந்தனர். கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பலத்த மழை பெய்து ஈரமாக இருந்த போதும் கிராம மக்கள் அதை பொருட்படுத்தாத தரையில் அமர்ந்து விருந்தில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இலை போடப்பட்டு சாப்பாடு பரிமாறப்பட்டது. அனைவருக்கும் சோறு போட்ட பின்னர் ஒரே நேரத்தில் கறி குழம்பு அனைவருக்கும் ஊட்டப்பட்டது. அனைவரும் சாப்பிட்டு எழுந்த பின்னர் இலைகள் எடுக்கப்படாமல் அங்கேயே விடப்பட்டது. வெயில் அடித்து இலைகள் காய்ந்து அங்கிருந்து காற்றில் அடித்துச் செல்லப்படும் வரை கிராமத்து பெண்கள் யாரும் அந்த பகுதிக்கு செல்ல மாட்டார்கள்.