கமுதி; கமுதி அருகே இடைச்சியூரணி கிராமத்தில் வல்லப கணபதி, இருளப்பசாமி,பாதாள பேச்சிஅம்மன் கோயில் வருடாபிஷேக விழா,வைகாசி பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. காப்புகட்டிய பக்தர்கள் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர். பின்பு பாதாள பேச்சிஅம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு நிகழ்ச்சியாக பக்தர்கள் சார்பில் நேர்த்திக்கடனாக வழங்கிய 51 கிடாய்களை பலியிட்டு பின்பு வல்லபகணபதி, இருளப்பசாமி பாதாள பேச்சிஅம்மன் உட்பட சாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. சமைத்து வைக்கப்பட்ட சாப்பாடுகளை படையலிட்டு சிறப்புபூஜை நடந்தது. பொது அன்னதானம் நடந்தது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.