திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா கொண்டாடப்படுகிறது. கடந்த மே 13 அன்று காப்பு கட்டுதல் மற்றும் கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து பத்து நாட்களும் காலை மற்றும் இரவில் உற்ஸவர் வீதி உலா புறப்பாடு நடந்து வருகிறது. நேற்று இரவு 7:00 மணிக்கு உற்ஸவர் பட்டாபிஷேக ராமர் யானை வாகனத்தில் எழுந்தருளி திருப்புல்லாணியில் நான்குரத வீதிகளிலும் உலா வந்தார். பட்டாபிஷேக ராமர் அலங்கார மண்டபத்தில் சீதா பிராட்டியாருக்கும், ராமபிரானுக்கும் நேற்று இரவு 7:45 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் சீர்வரிசை பொருட்கள் தாம்பூல பிரசாதங்கள் கொண்டுவரப்பட்டன. கோயில் பட்டாச்சாரியாரால் சீதா பிராட்டியாருக்கு மங்கள நாண் பூட்டப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சாற்று முறை கோஷ்டி பாராயணம் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், சுந்தரகாண்டம் உள்ளிட்ட ராமாயண இதிகாச பாடல்கள் பாடப்பட்டன. பக்தர்களுக்கு பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.