பதிவு செய்த நாள்
07
நவ
2012
10:11
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற தோப்பு ஸ்வாமி திருவிழாவில், நூற்றுக்கணக்கான ஆட்டு கிடா பலியிட்டு சிறப்பு பூஜை நடத்தினர். வாழப்பாடி அடுத்த புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசன வசதிபெறும் கிராமங்கள், அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்ராயன்மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்றுபடுகை கிராமங்கள் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட கிராமங்களில், பத்து ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. பாக்கு உற்பத்தி தொழிலில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பாக்கு காய்ககளை மரத்தில் இருந்து அறுவடை செய்யும் மரமேறும் தொழிலாளர்கள், சிங்கிபுரம் நாடார் தெரு அருகே ஆற்றங்கரையில் அமைந்துள்ள, காவல் தெய்வமான மதுரை வீரன் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று, விபத்து மற்றும் உயிர் சேதமின்றி பாதுகாக்க வேண்டுதல் வைக்கின்றனர். பாக்கு அறுவடை சீஸன் முடிவுக்கு வரும் நிலையில், ஐப்பசி மாதம் மூன்றாம் வாரத்தில், வேண்டுதல் நிறைவேற்றி உயிர்காத்த ஸ்வாமிக்கு, ஆட்டு கிடா பலிகொடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்துகின்றனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வரும் அந்த திருவிழா, "தோப்பு ஸ்வாமி திருவிழா, என அழைக்கப்படுகிறது. சிங்கிபுரத்தில் நேற்று நடந்த "தோப்பு ஸ்வாமி திருவிழாவையொட்டி, அதிகாலையில் இருந்து கோவில் வளாகத்தில் குவிந்த பக்தர்கள், நூற்றுக்கணக்கான ஆட்டு கிடாக்களை பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். ஸ்வாமிக்கு பலிகொடுத்த ஆட்டுக்கிடாக்களை சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து வைத்தனர்.