பதிவு செய்த நாள்
07
நவ
2012
10:11
திருத்தணி: அகத்தீஸ்வரர் கோவிலில், 64 பைரவர்களுக்கும் தனித்தனியாக, யாக சாலை அமைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். திருத்தணி அடுத்த, நாபளூர் கிராமத்தில் காமாட்சி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐந்து ஆண்டுகளாக, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், 64 பைரவர்கள் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்காக, பைரவர்கள் சிறப்பு மகா யாக விழா, கடந்த 2ம் தேதி துவங்கியது. விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில், 64 பைரவர்களுக்கும் தனித்தனியாக
யாகசாலை மற்றும் கலசங்கள் அமைக்கப் பட்டது.கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கின. தொடர்ந்து, 3ம் தேதி சாந்தி ஹோமம், திசா ஹோமம், அஸ்தர ஹோமமம் மற்றும் மூலவர் அம்மனுக்கு நவகலச பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், ஸ்ரீ ருத்ர த்ரிசதி ஹோமம், ரஷா பந்தனம் மற்றும் அகத்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள், வடுகபைரவர் பூஜை நடந்தன. பின்னர், 64 பைரவர்களுக்கும் ஸ்ரீ மகா வடுக யாக சாலை பூஜைகளை, 64 சிவச்சாசாரியார்கள் நடத்தினர். அனைத்து கலசங்களும் ஊர்வலமாக புறப்பட்டு மூலவர் அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப் பட்டது.தொடர்ந்து மூலவர் காமாட்சி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடந்தது. இரவு, கேரள வாத்தியங்களுடன் பைரவர்கள் மற்றும் உற்சவர் காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.