சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே மடூர் காளியம்மன், பகவதி அம்மன் முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் 15 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதற்காக 60 அடி உயரம் உள்ள கழுகுமரம் வெட்டிவரப்பட்டு அவற்றின் பட்டைகள் உரிக்கப்பட்டு வழுக்கும் பொருள்களான சோற்றுக்கற்றாழை, எண்ணெய் வகைகள் போன்றவை தடவப்பட்டு கோவில் மைதானத்தில் ஊன்றப்பட்டது. பெரிய கழுகு மரத்திற்கு அருகில் மூன்று குட்டி கழுகு மரங்கள் நடப்பட்டன. குட்டி கழுகு மரத்தில் ஏறிய பின்பு கழுமரம் ஏறுபவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பெரிய கழுகு மரத்திற்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கழு மரத்தில் ஏறத்தொடங்கினர். சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் முயற்சி செய்து உச்சியை அடைந்தனர். இதனைக் காண சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.