அவிநாசியில் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள 20 அடி உயர மகா முனி சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2024 03:05
அவிநாசி; ஆகாச ராயர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முன்னிட்டு கோவில் நுழைவாயிலில் இருபது அடி உயர பிரம்மாண்ட மகா முனி மற்றும் கொடுவாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவிநாசி வட்டம், வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எழுந்தருளியுள்ள பழமை வாய்ந்த ஆகாச ராயர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவிலின் நுழைவாயிலில் மிகப்பிரமாண்டமாக இருபது அடி உயரத்தில் மகா முனி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக, சிலை வடிக்கும் ஸ்தபதிகள் மிக நேர்த்தியாக தத்ரூபமாக மகாமுனி சிலையை வடிவமைத்துள்ளனர். இன்னும் இரு வாரங்களில் சிலை முழு வடிவத்திற்கு கொண்டுவரப்பட்டு வண்ணங்கள் தீட்டி சிலை முழுமை பெறும் என தெரிவித்தனர். அதில் காவல் தெய்வமான மகா முனியின் கைகளில் வைத்திருக்கும் கொடுவாளும் ஈட்டியும் மிக பிரம்மாண்டமாக இரும்பில் வார்த்துள்ளனர். சுமார் 30 கிலோ எடையும், ஒன்பது அடி உயரத்தில் கொடு வாளும், 10 கிலோ எடையில் ஒன்பது அடி உயரத்தில் ஈட்டியும் செய்துள்ளனர். மகாமுனியின் கைகளில் வைப்பதற்காக கொடுவாளையும் ஈட்டியையும் அதே பகுதியில் வசிக்கும் சமையல் கலைஞரான சந்திரன் என்பவர் உபயம் செய்துள்ளார். கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகளில் தரைதளத்தில் கல் பதித்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், கோபுர கலசங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது.