பதிவு செய்த நாள்
03
ஜூன்
2024
12:06
பிரதமர் மோடி கன்னியாகுமரியில் மூன்று நாள் தியானம் செய்தபடி அமர்ந்திருந்த தியான இருக்கை, 3 மணி நேரத்தில் தயாரான சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு பாறையில், மே, 30ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் மாலை வரை, மூன்று நாட்கள் தியான மேற்கொண்டார் பிரதமர் மோடி. அவர் ஓர் ஆசனத்தில் அமர்ந்து, தியானம் செய்யும் புகைப்படங்கள் வெளியாயின.
தேக்கு மரம்; பிரதமர் மோடியின் மூன்று நாள் தியானத்திற்காக, அந்த தியான இருக்கை 3 மணி நேரத்தில் தயாரானதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த இருக்கையை ஆசாரிபள்ளத்தை அடுத்த கீழச்சங்கரங்குழி பகுதியைச் சேர்ந்த மரத்தொழிலாளி சிவநேசன் செய்து கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தியானம் செய்வதற்காக, தியான இருக்கை ஒன்று வேண்டும் என அதிகாரிகள் மே, 30ம் தேதி அதிகாலை 5:30 மணி அளவில் என்னிடம் கூறினர். குருந்தன்கோட்டில் மரக்கடை வைத்திருக்கும் என் நண்பரிடம் தேவையான தேக்கு மரம் வாங்கினேன். கடைசல், டிசைன் போடும் பணிகளை உடனே தொடங்கினேன். உதவிக்கு என்னுடன் பணி செய்யும், சக தொழிலாளர்கள் இருவரை அழைத்துக் கொண்டேன். காலை, 10:00 மணிக்கு வேலையை தொடங்கி 3 மணி நேரத்தில் நேர்த்தியான தியான இருக்கையை அமைத்து அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டோம். சாதாரணமாக தியான இருக்கை செய்து முடிக்க மரத்துடன் சேர்த்து, 25,000 ரூபாயாகும்.
பொக்கிஷம்; பிரதமர் பயன்பாட்டுக்காக குறைந்த நேரத்தில் செய்ததால், சற்று கூடுதல் தொகை செலவானது. 6 அங்குலம் உயரம், 3 அடி நீளம், 2.5 அடி அகலத்தில் அந்த தியான இருக்கை தயாரித்தேன். அதில், 3 அங்குலம் உயரத்துக்கு குஷன் போட்டிருந்தனர். நான் தயாரித்த இருக்கையில் நாட்டின் பிரதமர் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பார்த்ததும், பணி செய்ததற்கான திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைத்தது. 130 கோடி மக்களின் பிரதமரான மோடி, நான் செய்த தியான இருக்கையில் அமர்ந்து தியானம் செய்ததை என் வாழ்நாளில் கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறேன். இந்த வாய்ப்பு என் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷம் என்றே நினைக்கிறேன். மிகவும் திருப்தியாக இருக்கிறது. என் தந்தை விவசாயம் செய்து வந்தார். என்னுடன் பிறந்தவர்கள் நான்கு சகோதரிகள். அதனால், என் படிப்பை 5ம் வகுப்புடன் முடித்து, கூலி வேலைக்குச் சென்றேன். மர வேலைகளில் ஈடுபாடு அதிகரித்ததால், அதில் என் கவனத்தை செலுத்தினேன். என்னுடைய, 27 வயதில் நான் முழுநேரமாக மரவேலை செய்யத் தொடங்கினேன். இப்போது, 52 வயதாகிறது. எனக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவரும் கல்லுாரியில் படித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.