பதிவு செய்த நாள்
08
நவ
2012
11:11
சென்னை: திருமலைக்கு வரும் பக்தர்கள் திருநாமம், விபூதி அணிய தேவையில்லை என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் கண்ணையா தெரிவித்தார். சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள், வைணவராக இருந்தால், நெற்றியில் திருநாமம் வைத்திருக்க வேண்டும்; சைவராக இருந்தால், நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் இட்டிருக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறை, இம்மாதம், 16ம் தேதியிலிருந்து, நடைமுறைக்கு வருகிறது என, செய்தி வெளியாகியுள்ளது. இப்படி ஒரு திட்டம், நிச்சயம் நடைமுறைப் படுத்தப் படாது என,கோவில் நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளனர். எனவே திருப்பதிக்கு வரும் பக்தர்கள் நெற்றியில் திருநாமமோ, விபூதியோ வைக்க தேவையில்லை. திருப்பதிக்கு தினமும், 26 ஆயிரம் பக்தர்கள் நடைபயணம் செல்கின்றனர். இவர்கள் உடமைகளை தூக்கி, திருமலைக்கு செல்வதற்கு சிரமப்படும் நிலை உள்ளது. பக்தர்கள் கொண்டு வரும் உடமைகள், அடிவாரத்தில் பெறப்பட்டு, தரிசனம் முடிந்து வரும் பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டம் கொண்டுவர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன்.பாத யாத்திரை பக்தர்களுக்கு, தேநீர் அல்லது காபி, பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ஆகியன வழங்கவும் தேவஸ்தான கூட்டத்தில் வலியுறுத்துவேன். மாற்றுத்திறனாளிகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும், "இளநிலை நிர்வாக அதிகாரி, திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநிலம் என்ற முகவரிக்கு, மூன்று நாட்களுக்கு முன், கடிதம் எழுதி, அதன் நகலை, திருமலைக்கு செல்லும்போது எடுத்துச் செல்லவேண்டும்.கடித நகலை, இளநிலை நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் காண்பித்து, அனுமதி பெற்று, காத்திருக்காமல் ஏழுமலையானை தரிசிக்கலாம்.இவ்வாறு கண்ணையா கூறினார்.