பதிவு செய்த நாள்
08
நவ
2012
11:11
திருச்சி: அன்னை காவிரி தீர்த்த யாத்திரை குழுவினருக்கு, திருச்சியை சேர்ந்த விவசாய அமைப்புகள், இந்து அமைப்புகள் சிறப்பான வரவேற்பளித்தனர். அகிலபாரத துறவியர் சங்கம் சார்பில், 2ம் ஆண்டு அன்னை காவிரி தீர்த்த யாத்திரை குழுவினர், கடந்த மாதம் 20ம் தேதி, கர்நாடக மாநிலம் தலைக்காவிரியில் (குடகு), யாத்திரையை துவக்கினர். 28ம் தேதி, தமிழகத்தில் காவிரி நுழையும், ஒகேனக்கல் தேச நாதீஸ்வரர் கோவில் முன் உள்ள, அண்ணாமலை ஆசிரமத்தை வந்தடைந்தது.வரும், 11ம் தேதி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகார் புவனேஸ்வரி கோவிலில், திருஈங்கோய்மலை லலிதா மகிளா சமாஜ யோகினி சாம்பவி வித்யாம்பா தலைமையில், லோபமுத்ரா ஹோமத்துடன் யாத்திரை நிறைவடைகிறது.*வரவேற்பு:திருச்சி மாவட்டத்தை வந்தடைந்த தீர்த்த யாத்திரை குழுவினரை, முசிறியில், அகில பாரதீய கிஸான் சங்கத்தினர் வரவேற்பளித்தனர். அதேபோல, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட்டில், அகில பாரத விஸ்வ ஹிந்த் பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் வரவேற்பளித்தனர். திருச்சி வந்த குழுவினர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்தனர். பின் அம்மாமண்டபம் காவிரியாற்றில் காவிரித்தாய்க்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். பாத யாத்திரையாக வந்த இக்குழுவில் இடம் பெற்றுள்ள துறவிகளிடம், பொதுமக்கள் ஆசி பெற்றனர்.