பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
05:06
திருப்போரூர்; போலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் உள்ளிட்ட ஐந்து கோவில்களில், மஹா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்போரூர் ஒன்றியம், பொன்மார் ஊராட்சியில் அடங்கிய போலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர், நீராளம்மன், கங்கையம்மன், சப்த கன்னிமார்கள், ராதா ருக்மணி உடனுறை வேணுகோபால சுவாமி ஆகிய ஐந்து கோவில்களில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. அங்கு, 12 ஆண்டுகளுக்கு பின், ஐந்து கோவில்களிலும் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 10ம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. நேற்று காலை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றதையடுத்து, புனிதநீர் கலசங்கல் புறப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, விமானகலசத்தை வந்தடைந்தன. இதனையடுத்து, வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் ஐந்து கோவில்களின் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை செய்து வைத்தனர். அதனை தொடர்ந்து, மஹா தீபாராதனைசெய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப் பட்டது. இதில், பொன்மார், போலச்சேரி, மாம்பாக்கம்உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நிறைவில், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், காஞ்சிபுரம் தி.மு.க., – எம்.பி., செல்வம், திருப்போரூர் வி.சி., – எம்.எல்.ஏ., பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், மாவட்ட குழு துணைத்தலைவர் காயத்திரி அன்புச்செழியன், பொன்மார் ஊராட்சி தலைவர் நாராயணன், துணைத்தலைவர், வார்டு கவுசிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
திரவுபதி அம்மன்: திருப்போரூர் பேரூராட்சி, 8வது வார்டில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக கோவில் விமான கோபுரம், மண்டபம் உள்ளிட்டவற்றில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவைமுன்னிட்டு, நேற்றுகாலை 10:30 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று காலை 9:30 மணிக்கு, யாக சாலையிலிருந்து புனிதநீர் கலசங்கல் புறப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்களால் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றிகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மஹா தீபாராதனை செய்யப்பட்டு, பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பன்கேற்று, அம்மனை வழிபட்டனர்.