பதிவு செய்த நாள்
13
ஜூன்
2024
05:06
பெ.நா.பாளையம்; துடியலூரில் நடந்த சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
துடியலூர் அரவான் திடலில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா காலை, 7:00 மணி அளவில் மங்கள வாத்தியத்துடன் தொடங்கியது. விநாயகர் பூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியன நடந்தன. தொடர்ந்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால பூஜைகள், ஹோமங்கள் நடந்தன. கும்பாபிஷேக விழாவையொட்டி, கணேச சிவாச்சாரியார், ஆலய அர்ச்சகர் கணபதி சுப்பிரமணிய சிவம், ஸ்தபதி கார்த்தி ஆகியோர் முன்னிலையில் யாக மண்டபத்தில் இருந்து தீர்த்த குடங்கள் எடுத்து, சித்தி விநாயகர் கோபுர கலசம் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. சித்தி விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், துடியலூர், சேரன் காலனி, வெள்ளக்கிணறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து இருந்தனர்.