பதிவு செய்த நாள்
14
ஜூன்
2024
11:06
அவிநாசி; திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த குடம் ஊர்வலம் நேற்று நடந்தது.
இக்கோவிலில், நாளை மறுநாள் (16ம் தேதி) காலை 6:30 – 8:00 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, திருமுருகநாதசுவாமி கோவிலில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். ஊர்வலத்தில், கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பில் பெருஞ்சலங்கை ஆட்டம், வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடைபெற்றது. அணைப்புதுார் ஏ.கே.ஆர்., பள்ளி மாணவர்கள் பெருமாள், ஆண்டாள், மீனாட்சி, உள்ளிட்ட தெய்வங்கள் போல வேடமணிந்து பங்கேற்றனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 16ம் தேதி காலை, 8:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அருள்மிகு திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை திருப்பணி குழு, ருத்ராபிஷேக குழு, சேக்கிழார் புனிதர் பேரவை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கரிவரதராஜ பெருமாள் கோவில் பட்டாச்சாரியார்கள் உட்பட பலர் செய்துள்ளனர்.