பதிவு செய்த நாள்
14
ஜூன்
2024
10:06
உடுமலை; உடுமலை அருகே, பக்தர்கள் ஒருங்கிணைப்பால் புதுப்பொலிவு பெற்ற கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் மனு அனுப்பியுள்ளனர். உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், பழமை வாய்ந்ததும், சிறப்பு மிக்கதுமான பல்வேறு கோவில்கள் அமைந்துள்ளன.
அவ்வகையில், உடுமலை அருகே, சோமவாரப்பட்டியில், ‘இரு கருவறை ஒரே தெய்வம்,’ என பல சிறப்புகளை கொண்ட மூவர் கண்டியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை பழமை மாறாமல், புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தங்கள் பகுதியின் தொன்மையை பறைசாற்றும் கோவிலின் நிலையை மாற்ற, பக்தர்கள் ஒருங்கிணைந்து, பணிகளை துவக்கினர். முதற்கட்டமாக, மேற்கூரை,மண்டப துாண், தரைத்தளம் சீரமைக்கப்பட்டது. நடைபாதை அமைத்து, செடிகள் நட்டு பராமரிக்கின்றனர். இதனால், பொலிவிழந்து காணப்பட்ட, கோவில் தற்போது, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஹிந்து அறநிலையத்துறையினர், கோபுர புனரமைப்பு பணிகளை துவக்கினால், அனைத்து வகைகளிலும், உதவவும் பக்தர்கள் தயாராக உள்ளனர்.
இது குறித்து தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு: பழமை வாய்ந்த, கண்டியம்மன் கோவில், சோமவாரப்பட்டி, பெதப்பம்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிக்கு, பெருமை பெற்றுத்தருவதாக முன்பு இருந்தது. காலப்போக்கில், சில மாறுதல்களால், கோவில், பொலிவிழந்து தற்போது, அனைவரின் பங்களிப்புடன், பணிகள் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் மூலவர் கோபுரங்களை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து அறநிலையத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு கும்பாபிேஷகம் நடைபெற வேண்டும் என சுற்றுப்பகுதியை சேர்ந்த பல கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.