பழநி முருகன் கோவிலில் தேசிய பேரிடர் மீட்பு படை ஒத்திகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 02:06
பழநி; பழநியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முருகன் கோயில் ரோப் காரில் மீட்பு, ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.
பழநிக்கு சென்னை, அரக்கோணம் பகுதியில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் கமெண்டண்ட் சங்கர பாண்டியன் தலைமையில் வருகை புரிந்தனர். இதில் 28 வீரர்கள் பங்கு பெற்றனர். பழநி மலைக்கோயில் செல்லும் ரோப்கார் சேவையில் விபத்து ஏற்பட்டு அந்தரத்தில் பக்தர்கள் ரோப் காரில் சிக்கிக் கொண்டால் பாதுகாப்பது குறித்த விளக்க ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர். இன்று (ஜூன் 14) காலை 10:00 மணிக்கு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது. ரோப் கார் பணியாளர்கள் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்து மீட்பு துறையினருக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிக்கு வந்தனர். அவர்களுடன் கோயில் பணியாளர்களும் இணைந்தனர். கோயில் ரோப்க்கார் கீழ்தளத்தில் காத்திருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் ரோப்கார் அந்தரத்தில் சிக்கி இருந்த நபர்களை மீட்க வருகை புரிந்தனர். உடனடியாக அந்தரத்தில் நின்றிருந்த ரோப் கார் பெட்டிக்கு கயிறுகள், கிளிப்புகள் உடன் கயிறு மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை படை வீரர் ஏறி சென்றார். பெட்டியில் இருந்த இருவருக்கு பாதுகாப்பு கவசங்கள் இணைத்து லாவகமாக கயிறு மூலம் கீழே இறக்கினார். மீட்பு பணி முடிந்ததும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ உதவிகளை மீட்பு படையில் மருத்துவர்கள் வழங்கினர். மீட்கபட்ட நபர்களுக்கு குளுக்கோஸ் தண்ணீர் வழங்கப்பட்டது. அரசு ஆம்புலன்ஸ் மற்றும் கோயில் ஆம்புலன்ஸ் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு பெறும் வரை ரோப் கார் நிலையத்தில் தயாராக இருந்தது. ஆர்.டி.ஓ., சரவணன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் பொறியாளர் குழுவினர், ரோப் கார் கண்காணிப்பாளர்கள் மற்றும் செக்யூரிட்டி பேரிடர் மீட்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.