மண்ணில் புதைந்திருந்த 13 ஐம்பொன் சுவாமி சிலைகள் மீட்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2024 02:06
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே தேவராயன்பேட்டையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான மச்சபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலின் அருகில் முகமது பைசல்,43, என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் புதிதாக வீடு கட்டுவதற்காக கட்ட பணியாளர்கள் அஸ்திவாரம் தோண்டினர். அப்போது, சுமார் 10 அடிக்கு மேல் தோண்டப்பட்ட அஸ்திவார குழியில் இருந்து சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பரபரப்படைந்த கட்டப் பணியாளர்கள் இடத்தின் உரிமையாளர் முகமது பைசலிடம் தகவல் அளித்தனர். இதையடுத்து பைசல் உடனடியாக பாபநாசம் தாசில்தார் மணிகண்டனுக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட அலுவலர்கள் சோதனை செய்த போது, 13 ஐம்பொன் சிலைகள் குழியில் இருந்து மீட்டனர். இச்சிலைகள் சோழர்காலத்து சிலை என கூறப்பட்டுள்ளது.