ராமலிங்க பிரதிஷ்டை விழா : ராமேஸ்வரம் கோயிலில் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2024 11:06
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவு பெற்றது.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமேஸ்வரம் கோயில் தலவரலாறு குறித்து பக்தர்களுக்கு நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்ட விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு ஜூன் 14ல் ராவணன் வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் ராமலிங்க பிரதிஷ்டை விழா துவங்கியது. ராமாயண வரலாற்றில் சஞ்சீவி மலையில் இருந்து அனுமான் சிவலிங்கத்தை எடுத்து கொண்டு ராமேஸ்வரம் வரும் காட்சி போல், நிறைவு விழா நாளான நேற்று கோயில் சன்னதி முன்பு அனுமான் வேடமணிந்த கோயில் கைங்கரியம் சந்தோஷ் பக்தி பரவசத்துடன் சிவலிங்கத்தை கையில் எடுத்து கொண்டு கோயில் முதல் பிரகாரத்தில் வலம் வந்தார். பின் சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார் கமலநாதன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.