பழநி அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2024 05:06
ஆயக்குடி; பழநி அருகே 16 ஆம் நூற்றாண்டு மதகு, கல்வெட்டு, சிற்பங்கள் கண்டுபிடிக்க பட்டது.
பழநி அருகே காளிப்பட்டி செங்குளத்தில் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்து போன மதகு, கல்வெட்டு, சிற்பங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது, "பழநி அருகே காளிப்பட்டியில் உள்ள செங்குளத்தில் தொல்லியல் ஆய்வில் கல்வெட்டுடன் கூடிய சிதைந்து போன மதகு ஒன்று கண்டறியப்பட்டது. செங்குளத்தின் வடக்குப்பகுதி கரையோரம் இந்த மதகு அமைக்கப்பட்டு இருந்திருக்கிறது. தற்போது அந்த மதகு முற்றிலும் அழிந்து விட்டது.குளத்தில் இருந்து பாசனத்திற்காக நீரை வெளியேற்றும் குமுழித் தூம்பு உடைந்த நிலையில் உள்ளது. உடைந்த இந்த குமுழியின் தூணில் 11 வரிகளுடன் ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டு உள்ளது.கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டு பசுவக் குடும்பன், ஆடி மாதம் 30 ஆம் தேதி புதிதாக இந்தக் குளத்தை வெட்டி மதகு அமைத்துக் கொடுத்தார் என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. இந்தப் பசுவ குடும்பனும் அவர் மனைவி மஞ்சம்மாளும் குமுழித்தூணில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். பசுவ குடும்பனின் இடது கையில் உள்ள நீர்க்கண்டி எனும் தண்டு அவர் ஒரு நீராணிக்கம் ஆகவும் விளங்கினார் என்பதைத் தெரிவிக்கிறது.
இந்தக் குளத்துக்கு நீராதாரம் பக்கத்தில் ஓடும் நல்ல தங்காள் ஓடையாகும். இந்த நல்லதங்காள் ஓடையில் இருந்து ஒரு கிளை வாய்க்கால் வெட்டி அதை புதிதாக வெட்டிய இக்குளத்தில் பசுவக்குடும்பன் இணைத்திருக்கிறார் இவ்வாறு சேகரித்த நீரைப் பயன்படுத்தி, தான் அமைத்துக் கொடுத்த குமுழி மதகின் மூலமாக அருகில் உள்ள நிலங்களுக்கு பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். புதிதாக ஒரு குளம் வெட்டி மதகு, குமுழி அமைப்பது மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தும் விசயம் என்பதையும் பொருட்படுத்தாமல் தாம் பெற்ற செல்வத்தை ஒரு பொதுநல நோக்கத்திற்காக செலவிட்ட பசுவக் குடும்பனின் செயல் போற்றத்தக்கதாகும். இதிலிருந்து நமது முன்னோர்கள் உழந்தும் உழவே தலை என்று வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது." என்றார்.