திருப்பதியில் ஜேஷ்டாபிஷேகம்; முத்து கவச அலங்காரத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2024 06:06
திருப்பதி; திருமலை ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக, இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ மலையப்பசுவாமி முத்து கவசம் அணிந்து நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார்.
திருமலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க கவசம் ஆண்டிற்கு ஒருமுறை களையப்பட்டு திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது. திருமஞ்சனம் முடிந்த பின் முதல் நாள் வைர கவசமும், 2ம் நாள் முத்து கவசமும் உற்சவமூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும். நிறைவு நாள் திருமஞ்சனம் முடிந்த பின் களையப்பட்ட தங்க கவசம் செப்பணிடப்பட்டு மீண்டும் அணிவிக்கப்படும். இந்த உற்சவத்தை தேவஸ்தானம் ஜேஷ்டாபிஷேகம் என்று குறிப்பிட்டு வருகிறது.
இந்த உற்சவத்தால் உற்சவமூர்த்திக்கும் அவர்களுக்கு அணிவிக்கப்பட்டுள்ள கவசத்திற்கும் ஏற்பட்டுள்ள சேதங்கள் கண்டறியப்பட்டு செப்பணிடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (19ம் தேதி) திருமலையில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் துவங்கியது. இன்று (20ம் தேதி) 2ம் நாள் திருமஞ்சனம் நடைபெற்றது. பின் உற்சவமூர்த்திகளுக்கு முத்து கவசம் சாற்றப்பட்டு அருள்பாலித்தார். முன்னதாக காலை 6.30 மணிக்கு ஸ்ரீ மலையப்பசுவாமி உபயநஞ்சாருடன் ஸ்ரீவாரி கோயிலின் சம்பங்கி பிரகாரத்தை வலம் வந்தார். காலை 8 மணிக்கு கோயில் அர்ச்சகர்கள் மற்றும் வேத ஓதகர்கள் மகாசாந்தி ஹோமம் நடத்தினர். பின்னர், காலை 9 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கும், தேவாரப் பெருமானுக்கும் அபிஷேகம் நடந்தது. மாலையில் ஸ்ரீ மலையப்பசுவாமிக்கு முத்து கவசம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே முத்து கவசம் அணிந்து சுவாமி அருள்பாலிப்பதால், இதை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.