பதிவு செய்த நாள்
02
ஜூலை
2024
03:07
ராபர்ட் சன் பேட்டை நான்காவது பிளாக் பகுதியில் 74 ஆண்டுகளாக காவல் தெய்வமாகவும், வேண்டிய வரம் தரும் அன்னையாகவும் விளங்குகிறாள் அருள்மிகு ஆதிசக்தி மாரியம்மன்.
ராபர்ட்சன் பேட்டையின் மேற்கு பகுதியில் அலங்கார நுழைவாயிலுடன் கோவில் நம்மை வரவேற்கிறது. இது, அனைத்து தரப்பினரும் பூஜிக்கிற புனித இடமாக போற்றப்படுகிறது. வழிப்போக்கரின் கனவில் அம்மன் தோன்றி, கோவில் அமைக்க கூறியதால், அரச மற்றும் வேம்பு மரங்களின் பக்கத்தில் கல் ஒன்றை நிறுவி, அதற்கு மஞ்சள் பூசி, திருநீறு, குங்குமம் இட்டு, சூடம் ஏற்றி பூஜை செய்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் அரச மற்றும் வேம்பு மரங்களின் கீழுள்ள அம்மனை பூஜிக்க துவங்கினர். பின்னர் கற்பாறை பலகை என்ற ஐந்து சப்டி கற்களை நட்டு வைத்து சிறிய கோவிலை ஏற்படுத்தினர். இங்கு வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது.
பிளேக் என்ற பெரிய அம்மை நோய் தங்க வயலிலும் பரவியது. நோய் பீடித்தவர்களை வீடுகளில் தங்க விடாமல் ஷெட்களில் தங்க வைத்தனர். அப்போது பிளேக் நோயாளிகளை கொண்டு வந்து அக்கோவில் அம்மன் காலடியில் கிடத்தி வழிபடுவோருக்கு நோய் குணமானது. பெரிய அம்மை, சிறிய அம்மை நோய் பாதித்தவர்களுக்கு குணம் தரும் தெய்வமாக இப்போதும் நம்பப் படுகிறது. இங்கு ஹிந்துக்கள், ஜைனர்களும் கூட அம்மன் கோவிலில் பூஜைகள் செய்து வந்தனர். பின், கோவில் புதுப்பிக்கப்பட்டது. அதுவரை, மாரியம்மன் கோவிலென அழைத்து வந்தனர். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் நாகராஜ் குருக்கள் 1986ல் சக்தி வாய்ந்த இக்கோவிலுக்கு ஸ்ரீ அருள்மிகு ஆதிசக்தி மாரியம்மன் கோவில் என பெயர் சூட்டினார். அதை அடுத்து, தங்கவயலில் உள்ள அம்மன் கோவில்களில் முதல் நவக்கிரஹ கோவிலை ஏற்படுத்தினர். கோவிலை புதுப்பிக்க மரங்களை அகற்றினர். அங்கு நாகம் நடமாடியது பக்தர் கண்களில் தென்பட்டதால நாக தேவதை சிலையும் பிரதிஷ்டை செய்தனர்.
நந்தி சொரூப சிவலிங்க சுவாமியையும், கோவில் வாசலில் கணபதி, முனீஸ்வரர் கோவிலையும், துர்கா தேவி அம்மன், வராஹி அம்மன், சுவாமி சிலைகள் எல்லாமே ஐதீக முறைப்படி பிரதிஷ்டை செய்தனர். கேரள மாநிலம், சோட்டானிகரை பகவதி அம்மன் அருளாசியுடன் 108 தீபங்கள் ஏற்ற அகல் விளக்கு கம்பத்தையும் ஏற்படுத்தினர். துர்க்கையம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நோய், மற்றும் துஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்குவதாக பக்தர்களுக்கு நம்பிக்கை உள்ளது. வாராஹி அம்மன் வழிபாடும் இங்கு விசேஷமாக நடக்கிறது. ஆதிசக்தி அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம், புத்திர பாக்கியம் கிடைப்பதால் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இங்கு விசேஷமாக ஞாயிறு தோறும் முனீஸ்வரர் பூஜை, செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், விசேஷ பூஜைகள் நடக்கிறது. அஷ்டமி, நவமி, பஞ்சமி, பவுர்ணமி பூஜைகள், அமாவாசைகளில் அம்மன் மாடவீதி நகர்வலம் நடக்கிறது. ஆடி மாதம் 3ம் வெள்ளி சிறப்பு விழாவும், சிவராத்திரியில் 5 கால பூஜையும் நடக்கிறது. தினமும் காலை 6:00 முதல் -10:30 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 8:30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் முனீஸ்வரர் பூஜை மதியம் 12:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடக்கிறது. – நமது நிருபர் –