பதிவு செய்த நாள்
03
ஜூலை
2024
11:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி கிருத்திகையையொட்டி நேற்று மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆனி கிருத்திகையான நேற்று, பிரதான ராஜகோபுரம் மற்றும் கொடி மரம் ஒட்டியுள்ள நுழைவாயில் பகுதியில் மட்டுமே போலீசாரும், கோவில் பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களை வரிசையில் செல்ல அனுமதித்தனர். மூலவர் சன்னிதியில் சுவாமி தரிசனம் செய்ய வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்பிரகாரத்தில் பக்தர்களை வரிசைப்படுத்த கோவில் ஊழியர்களும், போலீசாரும் இல்லாததால், ஒரே நேரத்தில் கோவிலுக்கு உள்ளேயும், தரிசனம் முடிந்து வெளியே வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர். எனவே, கிருத்திகை, சஷ்டி, செவ்வாய் உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் கோவில் உட்பிரகாரத்தில் போலீசாரும், கோவில் ஊழியர்களும் பக்தர்கள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
சொற்பொழிவு; திருக்குமரகோட்ட திருக்கோவில் வழிபாட்டுக்குழு சார்பில், காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 343வது ஆனி மாத கிருத்திகை சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கச்சபேஸ்வரர் கோவில் ஓதுவார் தமிழ்செல்வன், குமரக்கோட்டம் கோவில் ஓதுவார் லோகநாதன் ஆகியோர் தேவார திருப்புகழ் இன்னிசை வழங்கினர். புலவர் திருவிற்கோலம், முருகன் அடிமை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பெரிய காஞ்சிபுரம், நிமந்தகார தெரு, பழனி ஆண்டவர் முருகபெருமான் கோவிலில் ஆனி கிருத்திகை விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது.