பதிவு செய்த நாள்
03
ஜூலை
2024
11:07
காஞ்சிபுரம்; உத்திரமேரூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் மஹாபாரதம் மற்றும் தீமிதி பிரம்மோற்சவம் கடந்த மாதம் 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதில், தினமும், பிற்பகல் 1:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை கம்மாளம்பூண்டி மதுரா, ஆள்வராம்பூண்டி ராமசாமி பாகவதர் மகாபாரத சொற்பொழிவாற்றுகிறார். மேல்நந்தியம்பாடி குமார் கவி வாசிக்கிறார். ஜூன் 19ம் தேதியில் இருந்து, தினமும் இரவு 10:00 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம், நெடும்பிறை கிராமம் பொன்னியம்மன் கட்டைகூத்து கலைமன்றத்தினரின் மகாபாரத நாடகம் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. மாலை தீமிதி திருவிழா நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்தனர். விழாவில், உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று தருமர் பட்டாபிஷேகத்துடன், மஹாபாரதம் மற்றும் தீமிதி பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.