சோமனூர்; தொட்டிபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சோமனூர் அடுத்த தொட்டிபாளையத்தில் சித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், கன்னி மூல கணபதி, முருகன், வெள்ளையம்மாள், சிவ துர்க்கை அம்மன் கோவில்கள் பழமையானவை. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, நேற்றுக் காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. காலை, 10:00 மணிக்கு சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடங்கள் மற்றும் முளைப்பாரி மேள, தாளத்துடன் எடுத்து வரப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, கும்பஸ்தாபனம் மற்றும் முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. இன்று இரு கால ஹோமங்கள் மற்றும் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.