பதிவு செய்த நாள்
10
ஜூலை
2024
10:07
ராவணன் கடத்திச் சென்ற சீதா தேவியை இலங்கையில் இருந்து மீட்டு வர, ராமருக்கு ஹனுமன் உதவியாக இருந்தார். ராமரின் தீவிர பக்தரான ஹனுமன், பல சந்தர்ப்பங்களில் ராமர் மீதான பக்தியை நிரூபித்து உள்ளார். ராமர் கோவில் உள்ள இடங்களில் ஹனுமன் சிலையும் கண்டிப்பாக இருக்கும். ஹனுமனுக்கு என்றே சில இடங்களில், பக்தர்கள் தனியாக கோவில் கட்டியும் வழிபடுகின்றனர். கர்நாடகாவின் வட மாவட்டமான தார்வாட்டில் ஹனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹனுமன் கோவில் கட்டப்பட்டுள்ளது. தார்வாட்டில் இருந்து 7 கி.மீ., துாரத்தில் உள்ளது நுாக்கிகேரி கிராமம். இந்த கிராமத்தில் நுாக்கிகேரி ஹனுமன் கோவில் உள்ளது.
பக்தர் கனவு; ஹனுமன், தனது தீவிர பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி, நுாக்கிகேரி ஏரி தண்ணீருக்குள் எனது சிலை உள்ளது. அந்த சிலையை வெளியே எடுத்து வந்து கோவில் கட்டி வழிபடு என கூறியுள்ளார். இதனால் அந்த பக்தரும் ஏரி தண்ணீருக்குள் சென்று ஹனுமன் சிலையை தேடி கண்டுபிடித்தார். ஏரிக்கரையில் வைத்து வழிபாடு நடத்தினார். விஜயநகர பேரரசின் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் பிரதான துறவியாக இருந்த, ஸ்ரீவியாசராஜாவால் ஹனுமன் கோவில் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தேரோட்டம்; தற்போது கோவிலில் தெற்கு நோக்கிய மூன்று அடுக்கு ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் முன் தீப ஸ்தம்பம் உள்ளது. கருவறையில் கருங்கல்லால் பூசப்பட்ட கிரானைட் கற்களால் ஆன, 5 அடி உயர ஹனுமன் சிலை பிரமாண்டமாக காணப்படுகிறது. இந்த கோவில் தார்வாட் மாவட்டத்தில் முக்கியமான கோவிலாக விளங்கி வருகிறது. ஹனுமன் ஜெயந்தி அன்று இங்கு தேரோட்டம் நடக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஹனுமனை வழிபடுவதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
எப்படி செல்வது?; பெங்களூரில் இருந்து 440 கி.மீ., துாரத்தில் இக்கோவில் உள்ளது. பெங்களூரில் இருந்து பஸ், ரயில் சேவையும் உள்ளது. ரயிலில் செல்வோர் தார்வாட், ஹூப்பள்ளி ரயில் நிலையங்களில் இறங்கிச் செல்லலாம். பஸ்சில் செல்வோரும் தார்வாட், ஹூப்பள்ளியில் இருந்தும் செல்லலாம். - நமது நிருபர் -