பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
மிருகசீரிடம் 3, 4: : முயற்சியை மட்டுமே மூலதனமாக கொண்டு நினைத்தவற்றில் சாதிக்கும் சக்தி பெற்ற உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திர நாதன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதுடன் குரு பகவானும் அங்கே சஞ்சரித்து வருவதால் செலவுகள் பல வழியிலும் ஏற்படும் என்றாலும் மாதத்தின் முற்பகுதியில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரனால் தேவைக்கேற்ற பணம் வரும். பொன் பொருள் சேரும். எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும்.
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். இழுபறியாக இருந்த விவகாரங்கள் முடிவிற்கு வரும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் வேலைக்காக வெளிநாட்டிற்கு செல்வதற்கு மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு ஆதாயம் அதிகரிக்கும். குருவின் பார்வைகளால் ஆரோக்கியம் சீராகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தினர் ஆலோசனை இக்காலத்தில் நன்மைதரும். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் செலுத்துவது அவசியம். யோசிக்காமல் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம். அதை உங்களால் இப்போது நிறைவேற்ற முடியாமல் போகும். மேற்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 21.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 18, 23, 27. ஆக. 5, 9, 14.
பரிகாரம்: கருமாரி அம்மனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
திருவாதிரை: கற்ற கல்வியினாலும் பெற்ற அறிவினாலும் யோகமுடனும் செல்வாக்குடனும் வாழ்ந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் வளர்ச்சிக்குரிய மாதமாக இருக்கும். உங்கள் நட்சத்திரநாதன் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் இருந்த தடைகள் விலகும். பணியாளர்களால் ஆதாயம் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். திடீர் வரவுகளால் சங்கடங்கள் விலகும் என்றாலும் தொழில் காரகன் சனி வக்ரமடைந்திருப்பதால் எந்த ஒன்றையும் யோசித்து திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும். மூன்றாமிடத்து அதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளால் உங்கள் வேலைகள் நடந்தேறும். மற்றவர்களால் சாதிக்க முடியாதவற்றையும் நீங்கள் சாதிப்பீர்கள். உங்கள் ராசியாதிபதி வக்ரமடைவதால் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை படித்துப்பார்த்து அதன்பிறகு கையெழுத்திடவும். குருவின் பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சந்தோஷத்தில் இருந்த தடைகள் விலகும். எதிர்ப்புகள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகள் வார்த்தைகளில் நிதானம் காக்க வேண்டும். இல்லையெனில் தலைமையின் கண்டிப்பிற்கு ஆளாவீர்கள்.
சந்திராஷ்டமம்: ஜூலை 21,22.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22,23,31. ஆக. 4,5,13,14.
பரிகாரம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடங்கள் போகும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: கல்வியறிவும், தெய்வீக ஞானமும் கொண்டு பிறருக்காக வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் அறிவால் வெற்றி காணும் மாதமாக இருக்கும். விரய ஸ்தானமான 12 ம் இடத்தில் உங்கள் நட்சத்திர நாதன் சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் உங்கள் வாழ்வில் வசந்தத்தை உண்டாக்கிடப் போகிறது. சுக ஸ்தானம், சத்ரு ஸ்தானம், அஷ்டம ஸ்தானங்களை குரு பார்ப்பதால் இதுவரை வேலை, அலைச்சல், சோர்வு என்று நெருக்கடிகளை சந்தித்து வந்தவர்களுக்கு இனி நிம்மதி உண்டாகும். தாய்வழி உறவுகள் ஆதரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச்செல்வர். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு இப்போது கிடைக்கும். உடல்நிலை சீராகும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களிடமே உதவி கேட்டு வருவார்கள். பெண்களுக்கு உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வாழ்க்கைத்துணையுடன் இனக்கமான நிலை உண்டாகும். சிறு சிறு பிரச்னைகளால் பிரிந்திருந்தவர்கள் இப்போது ஒன்றிணைவீர். புதிய முயற்சிகளில் ஈடுபடும்முன் நன்றாக யோசிப்பது அவசியம். வரவைவிட செலவு அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் செலவுகளில் சிக்கனம் அவசியம்.
சந்திராஷ்டமம்: ஜூலை 22.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 21,23,30. ஆக. 3,5,12,14.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட தடைகள் விலகும். நன்மை அதிகரிக்கும்.