பதிவு செய்த நாள்
15
ஜூலை
2024
01:07
புனர்பூசம் 4 ம் பாதம் ; தெளிவான ஞானத்துடன் தங்கள் வேலைகளில் திட்டமிட்டு செயல்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதத்தை அதிர்ஷ்ட மாதம் என்றே சொல்லவேண்டும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் உங்கள் நட்சத்திர நாதன் குரு பகவான் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை எல்லாம் வெற்றியாக்குவார். செயல்களில் லாபத்தை அதிகரிப்பார். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை அகற்றுவார். பணியாளர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகளை இல்லாமல் செய்வார். பிள்ளைகள் நிலையில் உயர்வை வழங்குவார். குழந்தைக்காக ஏங்கியவர்களுக்கு பாக்கியத்தை அருள்வார். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு தகுந்த வரனை தந்தருள்வார். உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரிப்பார். இதுவரை உத்தியோகம், தொழில் ஆகியவற்றில் இருந்த நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு, இடமாற்றம் போன்றவை இக்காலத்தில் கிடைக்கும். இந்த நேரத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களை பயமுறுத்தி வந்த சனி பகவான் வக்ரமடைந்திருப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பயம் போகும். மருத்துவ சிகிச்சைக்கு நோய்கள் கட்டுப்படும். மறைந்திருந்த உங்கள் செல்வாக்கு வெளிப்படும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு வரும். குடும்பத்தில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பணி உயர்வுக்காக காத்திருந்த பெண்களின் கனவு நனவாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். விவசாயிகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 23.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20,21,29,30. ஆக. 2,3,11,12.
பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
பூசம்; நீதி, நேர்மை, நியாயம் என்று ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு மனத்துணிவுடன் எவருக்கும் அஞ்சாமல் செயல்பட்டு வரும் உங்களுக்கு எப்போதும் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியே உண்டாகும். பிறக்கும் ஆடி மாதம் உங்கள் வாழ்வில் திருப்பு முனையை உண்டாக்கும் மாதமாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து அச்சத்தை உண்டாக்கி வந்த உங்கள் நட்சத்திர நாதன் சனி பகவான் வக்ரம் அடைந்திருப்பதால் இதுவரை உங்களுக்கிருந்த பயம் விலக ஆரம்பிக்கும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பிறரின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கியிருந்த நிலையில் மாற்றம் ஏற்படும். இனி உங்கள் சுய ஆற்றல் வெளிப்படும். சமூகம் உங்களை உணர ஆரம்பிக்கும். தொழில் உத்தியோகம் போன்றவற்றில் இருந்த தடைகள் விலகி ஆதாயம் உண்டாகும். உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். உங்களை நிரூபிப்பதற்காக தெளிவுடன் செயல்படுவீர்கள். திட்டமிட்டு வெற்றியடைவீர்கள். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு செவ்வாயால் குரு மங்கள யோகம் உண்டாகும். உங்கள் செயல்கள் யாவும் லாபமாகும். வருமானம் பல வழியிலும் வர ஆரம்பிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர் விருப்பம் நிறைவேறும். காவல், ராணுவம், தீயணைப்புத்துறைகளில் பணிபுரிவோர் செல்வாக்கு உயரும். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் யாவும் இப்போது வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். வேலை வாய்ப்பிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 23,24.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 17, 20, 26, 29. ஆக. 2,8,11.
பரிகாரம்: அமிர்தகடேசுவரரை மனதில் எண்ணி வழிபட வாழ்வில் வளமுண்டாகும்.
ஆயில்யம்; வாழ்வின் அர்த்தம் தெரிந்து கல்வி கேள்விகளிலும் நினைத்த இலக்கை அடைவதிலும் முதன்மையானவராக வாழும் உங்களுக்கு, பிறக்கும் ஆடி மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் மாதமாக இருக்கும். மாதம் முழுவதும் உங்கள் பாக்யாதிபதி, பஞ்சம ஜீவனாதிபதியின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முயற்சிகள் நடந்தேறும். நிதி நிறுவனம், வங்கிகளில் டெபாசிட் செய்திருந்த பணம் வட்டியுடன் திரும்பவரும். அதிர்ஷ்டக்காரகனான சுக்கிரனின் சஞ்சார நிலையும் மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறிய முதலீட்டிலும் பெரிய லாபம் கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாம் எளிதாக நிறைவேறும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் இருந்த சங்கடங்கள் ஒவ்வொன்றாக விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றியாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். மழலை பாக்யம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் நிறைவேறும். ஒரு சிலர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நண்பர்கள் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனஸ்தாபத்துடன் பிரிந்திருந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைவீர்கள். பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வரும். இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவிற்கு வரும். வெற்றிமீது வெற்றி வந்து உங்களைச் சேரும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 24,25.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 20,23,29. ஆக.2,5,11,14.
பரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் வேண்டுவது நிறைவேறும். வாழ்க்கை வளமாகும்.