பதிவு செய்த நாள்
22
ஜூலை
2024
11:07
சென்னை; கோவில்களில் திருடி, கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்கலாம் என, வீட்டில் பதுக்கி வைத்திருந்த, இரண்டு அம்மன் உலோக சிலைகள் மற்றும் உடைவாள் ஒன்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை அடையாறு சாஸ்திரி நகரில், சுமதி வீட்டில், பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., சைலேஷ்குமார் யாதவுக்கு தகவல் கிடைத்தது. போலீசார், சுமதி வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு ரகசிய அறையில், உலோகத்தாலான நாகாத்தம்மன் உட்பட 2 அம்மன் சிலைகள், உடைவாள் ஒன்றும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மீட்ட போலீசார், சுமதி, அவரது கணவர் பிரகாஷிடம் விசாரித்தனர். அப்போது, ‘சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி,40; தங்கராஜ்,40; சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன்,42, கோவிலில் இருந்து சிலைகள் மற்றும் உடைவாளை திருடி வந்து எங்களிடம் கொடுத்தனர். சக்தி வாய்ந்த அம்மன் சிலைகள் மற்றும் உடைவாளை விற்றால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்; ரகசியமாக பதுக்கி வைக்கும்படி கூறினர்; அதன்படி செய்தோம்’ என்று கூறினர். சுமதி, பிரகாஷ் உள்ளிட்டோர் மீது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுமதி, பிரகாஷ், கலியமூர்த்தி, தங்கராஜ் ஆகியோரை கைது செய்து, புழல் சிறையில் நேற்று அடைத்தனர். தேடப்பட்டு வரும் ராஜேஷ் கண்ணன், ஏற்கனவே சிலை திருட்டு தொடர்பாக கைதாகி, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.